J . வேதநாயகம் வைத்தியர்
பூர்வீகம் கிறிஸ்தவ பாரம்பரியம்
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுகா, குளச்சல் கிராமம், பாலப்பள்ளம் – ஆனக்குழி பகுதியில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் காவிரி பூம்பட்டணத்தில் இருந்து வேணாட்டிற்கு குடி பெயர்ந்த சைவ செட்டி வேளாளர் சிவ வழிபாட்டு குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். அந்த பரம்பரையில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திரு. ஆகாசகுட்டி ஆசான் அவர்களது மகன் நீலகண்டன் வைத்தியர் கிறிஸ்துவை அறிந்து மனமாற்றம்பெற்று 1820-ல் சங். சார்லஸ் மீட் ஐயர் அவர்களிடம் ஞானஸ்நானம் பெற்று நீதி நாதன் ஆனார். நீதிநாதன் தம்பிள்ளைகளுக்கு தேவநாயகம், கருத்துடையான், பாக்கியம் என கிறிஸ்தவ பெயர் இட்டு முதல் ஆலயம் அமைத்து தொழுகை ஆரம்பித்தார். அன்று தொடங்கிய கிறிஸ்தவ பாரம்பரியம்.
நீலகண்டன் (எ) நீதிநாதன் கருத்துடையானை பெற்றார். கருத்துடையான் நீதிநாதனை பெற்றார். அவருக்கு யாக்கோபு, ஜோசப் என இரு மகன்கள் பிறந்தனர். ஜோசப் – ஞான சவுந்தரி தம்பதிகளுக்கு 28-03-1915-ல் முதல் மகனாக வேதநாயகம் பிறந்தார்..
இளமை பருவம்
குழந்தை வேதநாயகத்தை ஜோசப் ஞானசவுந்தரி தம்பதியினர் சீராட்டி தாலாட்டி வளர்த்தனர். கண் மருத்துவராக இருந்து நெசவு தொழிலும் செய்து வந்த ஜோசப் வைத்தியர் மகன் வேதநாயகத்தை பாலப்பள்ளம் லண்டன் மிசன் இரு வகுப்பு பள்ளியில் சேர்த்து கல்வி புகட்டினர். சட்டம்பிள்ளை தேவிகோடு அருமை நாயகம் அவர்களிடம் கல்விகற்று பின் 1927-ல் பள்ளியாடி L.M.S பள்ளியில் மூன்றாம், நான்காம் வகுப்புகளை பண்டிட் சாலோமன் அவர்களிடம் பயின்றார்.
மேல்படிப்புக்கு செல்ல போதிய சூழல் இல்லாத காரணத்தால் தாத்தா நீதிநாதன் வைத்தியர், அப்பா ஜோசப் இருவரிடமும் கண் மருத்துவம் கற்றார். குலதொழிலான நெசவு தொழிலிலும் பயிற்சி பெற்று சிறந்த நெசவாளர் ஆனார். நெடிய தோற்றமும், திடமான உடல் வாகும், மன உறுதியும், சமூக பற்றும் கொண்ட இளைஞர் வேதநாயகம் நாட்டுபுற கலைகளான சிலம்ப விளையாட்டு, களரி முதலிய பயிற்சிகளை நடூர்கரை சிவ சுப்பிரமணிய ஆசான், சாம்ப சிவபுரம் நைனார் ஆசான் இன்னும் பலரிடம் கற்று 1935-ல் அரங்கேற்றம் கண்டார்.
மருத்துவ பயிற்சி
பரம்பரை கண் மருத்துவத்தில் தேறிய வேதநாயகம் மாற்று மருத்துவ நுட்பங்களை கற்றுகொள்ள விரும்பி ராஜ வைத்தியர் வர்மானி ஓலக்காடு திரு. வேலாயுதன் (குட்டன் பிள்ளை) ஆசான் அவர்களிடம் இலவசமாக வர்ம சாஸ்திரங்களை பயிற்சியோடு கற்று எலும்பு முறிவு சிகிச்சையை நுட்பமாக அறிந்தார்.
சாலை வசதி, வாகன வசதி இல்லாத காலத்தில் இரவு பகல் பாராமல் கால்நடையாக நடந்து சூட்டு (தீவட்டி) கட்டி பயணம் செய்து வர்மாணியானார். ஒரு முறை சவுட்டு வண்டி (சைக்கிள்) செவுட்டு வண்டி என கூறிய குருவின் வார்த்தையை மதித்து தான் ஓட்டிச்சென்ற வாகனத்தை கால் நடையாக பல மைல்கள் உருட்டி வந்து வாழ்நாள் பூராவும் குருபக்திமிக்க சீடரானார்.
பல நூறு சித்த மருந்துகளை முறைபடி தயாரித்து சத்துரு மித்துரு பயன் அறிந்து சிகிச்சையில் பயன்படுத்தி வந்தார். அவருடைய தயாரிப்புகள் எளிமையானதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது. நுட்பமான ஓலை சுவடிகள், மருத்துவ பிரதிகள் பலவற்றை பகர்த்தி அகர அட்டவணையிட்டு பொக்கிஷம் ஆக்கினார். சாஸ்திரங்களை பாராயம் செய்து பாடுவதில் வல்லவர்.
1945-ல் தென் திருவிதாங்கூர் மருத்துவ கவுன்சில் தேர்வு மூலம் “B” கிளாஸ் சான்று பெற்று அரசு பதிவு பெற்ற மருத்துவரானார் (Reg. No. 425).
கண்ணுபுரை என்றிருந்த சிறிய ஸ்தாபனத்தை சக்தி சித்த வைத்திய நிலையம் ஆக்கி உள்நோயாளிகள் தங்க மூன்று அறைகள் கொண்ட தங்கும் விடுதி அமைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிய செலவில் மருத்துவம் செய்து கைராசி வர்மாணி வைத்தியரானார்.
ஏழைகள் மீது கரிசனை உள்ளவராக இலவசமாக பலருக்கும் உதவிகள் செய்தார். சமயம் கிடைத்தபோதெல்லாம் அழைப்பின் பேரில் பிணியாளிகளை தேடிச்சென்று சேவை செய்தார். பிற ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் தேடி வந்தனர்.
பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று 1974-ல் ஆனக்குழி ரோட்டோரத்தில் ஆனக்குழி ஆசான் – சக்தி சித்த வைத்திய நிலையம் அமைத்து பிரபலமானார். 1976-ல் எட்டு அறைகள் கொண்ட வார்டு கட்டி தொழில் வளம் கண்டார்.
மருத்துவ கல்வி முடிக்கும் மகன்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக திருவனந்தபுரம் மாவட்டம் பாச்சலூரில் 1982-ல் கிளை சித்த வர்ம வைத்திய சாலை அமைத்து உள்நோயாளிகள் இட்டு தொழிலை விரிவாக்கினார்.
திருமணம் – மக்கள்
வாலிபன் வேதநாயகம் 24-வது வயதில் நாகர்கோயில் இராமவர்மபுரம் கிழக்கு லுத்தரன் தெருவில் வேதமாணிக்கம் – பரமாயி மகள் பாக்கியமுத்துவை 28-12-1939-ல் கல்வாரி லுத்தரன் ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
அழகும் சாந்த குணமும் இறைபற்றும் கடின உழைப்பும் கொண்ட பாக்கியமுத்துவை வாழ்க்கை துணையாக பெற்ற வேதநாயகம் எல்லா நிலைகளிலும் உயர்வு பெற்றார். தம்பதியருக்கு தேவசகாயம், சம்ராஜ். சுபாஷ், சந்திரபோஸ், நோபிள், ஸ்டான்லி ஜோண்ஸ், தம்பிராஜ், ஜெயசிங், குணசிங் என எட்டு ஆண் மக்கள் பிறந்தனர்.
மூத்தவரை நாட்டை காக்கும் பணிக்கும், இரண்டாமவரை சுற்றுபயண மருத்துவப்பணிக்கும், மூன்றாமவரை அரசு ஒப்பந்தகார பணிக்கும், நான்காமவரை மருந்து தயாரித்தல் பணிக்கும், ஐந்தாம் மற்றும் ஆறாவது மகன்களை பட்டதாரி அரசு சித்த மருத்துவ பணிக்கும், எட்டாவது மகனை பரம்பரை மருத்துவ பணிக்கும் அற்பணித்து மகிழ்ந்தார்.
திருச்சபை பணிகள்:
கிறிஸ்தவ பாரம்பரியத்தில் 5-வது தலைமுறையில் வேதநாயகம் கடவுள் பற்றும் வேத அறிவும் ஆலய வாஞ்சையும் உடையவராய் சபை ஈடுபாட்டை
வளர்த்துக் கொண்டார். 1945-ல் 30-வது வயதில் பாலப்பள்ளம் சபை டீக்கனாராக தேர்வு செய்யப்பட்டார்.
சபை கணக்கராக, சர்க்கிள் கவுன்சில் அங்கத்தினராக ஆற்றலுடன் செயல்பட்டு வந்தார். 1953-ல் சபையில் பிளவு ஏற்பட்டபோது தீரமுடன் போராடி பாலப்பள்ளம் மேற்கு சபை தொடர்ந்து செயல்பட காரணமாய் விளங்கினார். சபை மக்கள் மீதுள்ள கரிசனையும், ஆதின நல்லுறவும், போதகர்கள் உபசரிப்பும், சபை வளர்ச்சிக்கும் அவர் தம் வாழ்வுக்கும் பேருதவியாய் இருந்தது. 1963-ல் கேரள பிரசங்கியாரை அழைத்து வந்து நற்செய்தி விழா நடத்தினார்.
1972-ல் சபை செயலாளராக பொறுப்பேற்றார். சபை நீதி பெருக்க தனது வைத்திய நிலயத்தில் காணிக்கைபெட்டி அமைத்து ஆதீன லெவி அடைக்க உதவினார். 1976-ல் சமூக பணி சிறக்க திருச்சபையின் கரமான YMCA தொடங்கி ஸ்தாப தலைவரானார்.
சபை மக்களை எழுச்சியூட்டி பாலப்பள்ளம் காங்ரீட் ஆலயம் அமைக்க காரணமாயும் பேருதவியுமாய் இருந்து 07-10-1979 அன்று பிரதம பேராயர் அதி உயர்மறை திரு. டானியல் ஆபிரகாம் அவர்களை அழைத்து வந்து மங்கலபடைப்பு கண்டார். 1984-ல் புதிய ஆலயத்திற்கு அருகில் மணிகோபுரம் கட்ட பணி மேற்கொண்டார். 1972 முதல் 1985 நவம்பர் 1 மரணம் வரை கன்னியாகுமரி அத்தியட்சாதீன மாமன்ற உறுப்பினராக நற்பணியாற்றினார்.
சமுதாய பணிகள்
உடல் வலிமையும் மனவலிமையும் கொண்ட வேதநாயகம் இளைஞராக இருந்த போதே சேவை மனப்பான்மையும் சமூக விளிப்புணர்விலும் சிறந்து விளங்கினார். 1934-ல் தனது 19-வது வயதில் லண்டன் மிசன் இருவகுப்பு பள்ளியை மூன்று வகுப்பு பள்ளியாக உயர்த்துவதற்காக வரிசெலுத்தி நிதி பெருக்கி வகுப்பறை அமைத்தார்.
பொது வழிபாதை இல்லாதிருந்த பாலப்பள்ளம் கிராமத்திற்கு 1938-ல் பாதை அமைக்க தனது ஆபரணங்களை அடமானம் வைத்து நிதி வழங்கி பாதை அமைக்க காரணமானார்.
1939-ல் ஆனக்குழி வட்டாரத்தில் முதல் முறையாக தனது வீட்டு வளாகத்தில் கழிவறை அமைத்து சுகாதார விழிப்பு ஏற்படுத்தினார்.
லண்டன் மிசன் பள்ளியை அரசு பள்ளியாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு 1945-ல் அரசு தொடக்கப்பள்ளி உருவாக காரணமானார்.
1947-ல் உறவினர்களை ஒன்றிணைத்து கேரள முதலி சமுதாயத்தின் 6-வது கிராம கிளையை பாலப்பள்ளத்தில் அமைத்து அதன் முதல் தலைவரானார். சமுதாயம் வளர பாடுபட்டார். தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அங்கத்தினராக இருந்து காமராஜர், சிதம்பர நாடார், பொன்னப்பநாடார், மார்ஷல் நேசமணி, லூர்தம்மாள் சைமன் போன்ற தலைவர்களுடன் இணைந்து விடுதலைக்காக போராடினார். நாடு சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியை பள்ளி வளாகத்தில் தேசிய கொடி நாட்டி கொண்டாடினார்.
1951-ல் நெசவாளர்களை ஒருங்கிணைத்து பாலப்பள்ளம் வீவேர்ஸ் – கோ – ஆப்பரேட்டிங் சொசைட்டி (C.S. No. 1478) உருவாக்கி அதன் தலைவராக இருந்து நெசவாளர்களின் நலன் காத்தார்.
கூட்டுறவு சங்க லாபத்தை கொண்டும் நன்கொடைகள் மூலமும் கிராமத்தில் இருந்த பழைய கிணறை ஆழப்படுத்தி கருங்கல் கட்டி மதில் சுவர் சிமெண்ட் இட்டு பாவு நனைக்க கல் தொட்டி அமைத்தார்.
கிராம மக்கள் வேண்டுகோளுக்கிணங்க புதிய கிணறு வட்டு இறக்கி ஆழப்படுத்தி குடிநீர் பற்றாக்குறை தீர்த்தார். கல் தொட்டி அமைத்தார்.
1944-ல் பிறமத வழிபாட்டால் ஊர் ஒற்றுமைக்கு இடையூறு ஏற்பட்ட சூழலில் அரசு துறைகள் மூலம் காரணமானவர்களிடம் பேசி சமூக தீர்வுகண்டு ஊர் ஒற்றுமையை நிலை நாட்டினார்.
குடும்ப கல்லறை தோட்டத்தை சீர்படுத்தி மூத்தோரை நினைவு கூர்ந்து கல்லறைகள் கட்டி நினைவு சின்னமாக்கினார்.
முதல் முறையாக மின்சார இணைப்பை தனது விட்டிற்கு பெற்று 25-12-1962 கிறிஸ்துமஸ் தினத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
1963-ல் உடன் பிறந்த சகோதரனுக்கு தனது செலவில் சொந்தமாக வீடு கட்டி கொடுத்தார். அரசு அதிகாரிகளிடம் நல்லுறவை ஏற்படுத்தி ஊர் வளர்ச்சிக்கும் மக்கள் மேம்பாட்டிற்கும் பாடுபட்டார். 1976-ல் பாலப்பள்ளம் Y.M.C.A உருவாக்கவும் அதன் ஸ்தாபக தலைவராகவும் இருந்து மக்கள் ஒற்றுமைக்காக இணைந்து செயல்படவும் சுகாதார விழிப்புணர்வு ஏற்பட காரணமாய் இருந்தார்.
பாலப்பள்ளம் அரசு தொடக்கப்பள்ளி கட்டிட பற்றாக்குறையால் தவித்தபோது அவர் தம் துணைவியார் பாக்கியமுத்து அம்மையாருக்கு ஆலோசனை வழங்கி 20 சென்ட் நிலம் அரசுக்கு தானம் வழங்கி பள்ளி தொடர்ந்து புதிய வளாகத்தில் 24-03-1981 முதல் இயங்க காரணமானார். மேலும் 20 சென்ட் நிலத்தை 1982-ல் அரசுக்கு தானம் வழங்கி பள்ளியை நடுநிலைப்பள்ளியாக உயர்த்திய பெருமை அன்னாரை சாரும்.
நோயும் மரணமும்
சிறு வயதிலிருந்தே உடல் வலுவோடு நோய் தாக்குதல் எதுவும் இல்லாமஙல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த வேதநாயகம் எந்த மருந்துகளும் எடுத்து கொண்டதில்லை. வெற்றிலை, பாக்கு, புகையிலை இடும் பழக்கம் உண்டு. பற்கள் அனைத்தும் தொலைந்து போனதால் பலரது வேண்டுதலுக்கு இணங்கி செயற்கை பற்கள் பொருத்த விரும்பி 1974-ஆம் ஆண்டு மருத்துவம் மேற்கொண்டார்.
துர்அதிர்ஷ்ட விதமாக அன்று முதல் காரம் கடினமான உணவுகள் சாப்பிட முடியாமல் போனது.
பல்லாயிரம் மக்களுக்கு பல்வேறு நோய்களை தீர்த்த வேதநாயகம் தனக்கு வந்திருப்பது கொடிய வியாதி என்று தெரிந்தும் கருமமே கண்ணாக மருத்துவ பணியை தொடர்ந்தார். பிள்ளைகளுக்கும், திருச்சபைக்கும், சமூகத்திற்கும் செய்ய வேண்டிய அனைத்தும் செய்து முடித்துவிட்டு 1984 டிசம்பர் 25 கிறிஸ்மஸ் தினத்தை மகிழ்ச்சியாக அனைத்து பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் அழைத்து கொண்டாடி குடும்ப புகைப்படம் எடுத்துவிட்டு சொன்னார். “தனக்கு ஒரு வியாதி கீழ் தாடையில் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு மருத்துவம் பார்த்தால் இரண்டும் செய்யலாம்” என்றார்கள். பிள்ளைகளுடைய வேண்டுகோளுக்கு இணங்க 1985 ஜனவரி சிகிட்சைக்காக திருவனந்தபுரம் “ரீஜினல் கேன்சர் சென்டர்” மருத்துவமனையில் நோய் பரிசோதிக்கப்பட்டு புற்றுநோய் என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து உள்நோயாளியாக, வெளிநோயாளியாக சிகிட்சை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு 25 முறை கதிர்வீச்சு மருத்துவம் வழங்கப்பட்டது. நோய் தீவிரமானதே ஒழிய குறையவில்லை. உணவு உட்கொள்ள இயலாத நிலையில் உடல் வலு குறைய ஆரம்பித்தது.
பலருடைய வேதனையை தீர்த்த அன்னார் தனது வேதனை வலிகளை பொறுமையுடன் சகித்த விதம் மெய்சிலிர்க்க வைப்பதாய் இருந்தது. எழுபது ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்த நல்ல மருத்துவ ஆசான், குடும்ப தந்தை, சமூக வழிகாட்டி 1985-ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் மாலை 5 மணிக்கு மரணம் அடைந்தார்கள். செய்தி அறிந்து கூடிய பல்லாயிரம் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த 02-11-1985 மாலை 5 மணிக்கு ஆனக்குழி C.S.I ஆலயத்தில் உயர்மறை திரு. G. கிறிஸ்துதாஸ் பேராயத் தலைமையில் இரங்கல் தொழுகை முடித்து 200 ஆண்டு பாரம்பரியம் உடைய குடும்ப கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
சகல புனிதர்கள் தினத்தில் புனிதரான அன்னார் சகல ஆத்துமாக்கள் தினத்தில் ஆறுதல் பெற்றது என்றும் மங்கா நிகழ்வுகளாய் இன்றும் நினைவு கூறப்படுகிறது .